பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை மூட மீண்டும் மக்கள் போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2026 (புதன்கிழமை)
பருத்தித்துறை நகர எல்லைக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றி, பொருத்தமான இடங்களுக்கு மாற்றக் கோரி மீண்டும் மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு பருத்தித்துறை நகர சபை தீர்மானித்துள்ளது.
பருத்தித்துறை நகர முதல்வர் டக்ளஸ் பவுல் முன்வைத்த இந்தத் தீர்மானம், திங்கள்கிழமை நடைபெற்ற நகர சபையின் மாதாந்த அமர்வில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றதுடன், நகர சபைச் செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் 15 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு இதே கோரிக்கையை முன்வைத்து நகர சபை ஏற்பாடு செய்த மக்கள் போராட்டத்தை நினைவு கூர்ந்த முதல்வர், அப்போது இந்த விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்றும், ஆமுகாம்கள் விரைவில் அகற்றப்படும் அரச தரப்பு தெரிவித்திருந்ததாகக் கூறினார். எனினும், ஒரு ஆண்டு கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதை அடுத்து, பொதுமக்கள் அமைப்புகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களை ஒன்றிணைத்து, இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் வகையில் ஓகஸ்ட் மாதத்தில் மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நகர சபை முடிவு செய்துள்ளது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், 1983 கறுப்பு ஜூலை இன வன்செயலில் உயிர் இழந்த தமிழ் பொதுமக்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை நினைவு கூர்ந்து உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்திலும், நகர எல்லைக்குள் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ள இராணுவ முகாம்கள் பருத்தித்துறையின் பொருளாதார மற்றும் நகர அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளதாக பங்கேற்பாளர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
நகர சபையின் கோரிக்கை முக்கியமாக இரண்டு இராணுவ முகாம்களை மையப்படுத்தியுள்ளது.
அவற்றில் ஒன்று, பருத்தித்துறை ஜெட்டி பகுதியில், நகர மையத்துக்கு மிக அருகிலும், பிரபலமான இரண்டு பாடசாலைகளுக்கு அண்மையிலும் அமைந்துள்ள இராணுவ முகாமாகும். இந்தப் பகுதி ஒரு காலத்தில் பருத்தித்துறையின் முக்கிய வர்த்தக மையமாக இருந்த போதிலும், இராணுவம் அங்கு நிலைகொண்ட பின்னர் வணிக நடவடிக்கைகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாக உள்ளூர் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த இராணுவ முகாம் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது முகாம், பருத்தித்துறையின் வடக்கு முனையில் உள்ள முனை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாம் ஆகும். இந்த முகாமின் கட்டுப்பாட்டுக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க பருத்தித்துறை கலங்கரை விளக்கமும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முனை கடற்கரையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராணுவ பிரசன்னம், பொதுமக்களின் சுதந்திரமான அணுகலைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பருத்தித்துறையின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பரப்புகளைப் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக உள்ளூர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். (பிரதி - நாம் மனிதர்கள் பத்திரிகை)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.